"வென்றாக வேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்"-இருப்பாய் தமிழா நெருப்பாய்

திருக்குறளை பரப்பப் போகிறதாம் ஏர்டெல்!

உலகப் பொதுமறையாம் திருக்குறளை தனது செல்பேசியின் வாயிலாக தனது வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லப்போவதாக பார்த்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது!

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் தென்னிந்திய சேவைகளுக்கான தலைமை செயல் அலுவலர் ராஜீவ் ராஜகோபால் இதைத் தெரிவித்துள்ளார்.

ஏர்டெல் செல்பேசி வாடிக்கையாளர்கள் தங்கள் செல்பேசியில் 54321 என்ற எண்ணிற்கு குறுஞ்சேவை செய்து விண்ணப்பித்தால் ஒரு நாளைக்கு ஒரு குறள், அதன் விளக்கத்துடன் அனுப்பப்படும் என்றும், அதற்கு ஒரு ரூபாய் வசூலிக்க்ப்படும் என்றும் ராஜீவ் ராஜகோபால் கூறியதாக யு.என்.ஐ.செய்தி கூறுகிறது.

பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக இருப்பவர் ராஜன் பார்த்தி மிட்டல். இவர்தான் இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபிக்கியின் (Federation of Industries and commerce of India -FICCI) தலைவராகவும் உள்ளார். தமிழர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழாவை ஐஃபா(India International film Academy - IIFA)வுடன் இணைந்து நடத்தியது இந்த ஃபிக்கி அமைப்புதான்

.

விருது வழங்கு விழாவுடன் உலக வர்த்தக மாநாட்டையும் (Global Business Conclave) கொழும்புவில் நடத்தியது ஃபிக்கி அமைப்பு. ஐஃபா விருது வழங்கு விழா கொழு்ம்புவில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழர் அமைப்புகள், விழாவை வேறு எங்கு வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தியபோதும் அதைக்கண்டுகொள்ளாமல் கொழும்புவிலேயே விழாவை நடத்தியது ஃபிக்கி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழினப் படுகொலை நடந்த இலங்கையை ஒரு புதிய நாடு என்றும், முதலீட்டிற்கும் வணிக வளர்ச்சிக்கும் வாய்பளிக்கும் கவர்ச்சியான இடம் என்றும் தனது இணைய தளத்திலேயே குறிப்பிட்டு வணிக நிறவனங்களை கொழும்புவிற்கு வரவேற்றது ஃபிக்கி.

அதனால்தான், தமிழர்களின் எதிர்ப்பை மீறி அங்கு திரைப்பட விருது வழங்கு விழாவையும், வர்த்தக மாநாட்டையும் நடத்திய ஃபிக்கி அமைப்பை மனித குல விரோத அமைப்பாக அறிவித்து, அதன் தலைவராக இருக்கும் ராஜன் பார்த்தி மிட்டல், தலைமை செயல் அலுவலராக உள்ள ஏர்டெல் நிறுவனத்தின் செல்பேசி, இணைய சேவை ஆகிய அனைத்தையும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழர் அமைப்புகள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளன எனபது குறிப்பிடத்தக்கது.

தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க அரசோடு கைகோர்த்து இலங்கையில் செல்பேசி சேவை நடத்திக்கொண்டு, இங்கு தமிழ்நாட்டில் திருக்குறளையும் பரப்ப (காசுக்குத்தான்) முன்வந்துள்ளது ஏர்டெல்!

 நன்றி
வெப் உலகம்