"வென்றாக வேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்"-இருப்பாய் தமிழா நெருப்பாய்

எந்திரன் இதயத்திலிருந்து...


இது எந்திரன் பீவர் காலம். உங்கள் இதயத்தில் யார் இடம்பிடித்திருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் ஒரு எந்திர இதயத்தில் முழு இத்தாலியும் இடம்பிடித்திருக்கிறது. நிரந்தரமாகப் இயங்கக்கூடிய முற்றிலும் செயற்கையாக வடிவைக்கப்பட்ட ஓர் இதயம், 15 வயதே ஆன ஒரு இத்தாலி சிறுவனுக்கு பொருத்தப்பட்ட சம்பவம், மருத்துவ உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாதுகாப்பு காரணங்களால், இச்சிறுவனின் பெயர் உட்பட மேலதிக விபரங்களை வெளியிட மருத்துவர்கள் விரும்பாத போதும், தொடர்ந்து 10 மணித்தியால அறுவை சிகிச்சை மூலம் இத்தாலிய வைத்தியர்கள் இதனை சாத்தியமாக்கியிருக்கிறார்கள் என்பது தான் மருத்துவ உலகில் நீண்டகாலத்திற்கு பிறகு கிடைத்த ஒரு ஆரோக்கியமான தகவல். சரி இது பற்றி விரிவான ஒரு பார்வை

அச்சிறுவனுக்கு என்னதான் பிரச்சினை? என்ன தீர்வு?

தேவையற்ற சதைக்கழிவுகளில் அவனது இதயத்தில் காணப்பட்டமையினால், உடனடி மாற்று இதயம் பொருத்தப்பட வேண்டியிருந்தது.
ஆனால் வழமை போல இன்னொரு இயற்கை மாற்று இதய அறுவை சிகிச்சைக்கு அவன் தகுதியடையவில்லை என்பது தான், மருத்துவர்களின் கவலை.

மரணத்திற்கு அருகாமையிலேயே சென்று விட்டான் அவன். வேறு வழியில்லையெனும் போது, இத்தாலிய மருத்துவர்களின் யோசனையில் உதித்தது இச்செயற்கை இதயம்.யார் சிகிச்சையை நடத்தினார்கள்? எங்கு நடந்தது?


டாக்டர் அண்டோனியோ தலைமை தாங்கி ரோமில் உள்ள பம்பினியோ கெஸு சிறுவர் மருத்துவமனையில் இவ் அறுவைச்சிகிச்சையை நடத்த முடிவு செய்தார்.அறுவை சிகிச்சையின் முக்கிய படிநிலைகள் என்ன?

செயற்கையாக வடிவமைக்கப்பட்ட இந்த இதயம் சுமார் 2.5 in நீளமுடையது. இருதயத்தின் இடது வெண்டிரிகிள் பகுதியில் உட்புறத்தில் பொருத்தும் சிகிச்சை முதலில் நடத்தப்பட்டது. இதிலிருந்து ரத்த ஓட்டம் செல்லும் படி மார்பு கூட்டிற்குள் இச்சாதனம் வைக்கப்பட்டது.

எனினும் இதன் தொழிற்பாட்டு மையம் தொண்டைக்குழாய்களில் பொருத்தப்பட்டது. அதன் துடிப்பு தொண்டையில் இருந்து நீர்சக்தியால் இயங்க வைக்கப்பட்டது.

அவனது இடது காதின் பின் வெளிப்புறத்தில் இதயத்தின் தொழிற்பாட்டிற்கான மின்சக்தி கலன் பொருத்தப்பட்டது. தொலைபேசியில் சக்தி சேமிப்பதை போன்றூ அவன் தூங்கும் போது தானகவே இக்கலன் சக்தியை சேமித்துக்கொள்ளும்.

டொச்சேன்ஸ், சிம்ட்ரோம் எனும் இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க இத்தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது இதுவே முதன் முறை. அவன் இன்னமும் தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டுள்ள போதும், அவனது உடல் நலம் தேறி வருவது குறிப்பிடத்தக்கது.

இச்சிகிச்சை பற்றி டாக்டர் அண்டோனியோ என்ன கூறினார்?

வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிவடைந்ததும், தாயின் கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் அண்டோனியோ, அச்சிறுவன் காலையில்
பல் துலக்கும் போது அவனிடம் பேச்சுக்கொடுக்காதீர்கள் என சிரித்துக்கொண்டே கூறினர்.

சாவின் விளிம்புக்கு சென்றிருந்தாலும் இனி, மற்ற சிறுவர்களை போல அன்றாட தினசரி வேலைகளை அவனாலும் இனி செய்ய முடியும் என்ற அர்த்தத்திலும், தொண்டையில் தான் செயற்பாட்டு மையம் இருக்கிறதென்பதாலும், அவர் இப்படி கூறினார்.

ஒரு வயது வந்த இளைஞரை விட சிறுவனொருவனுக்கு இம்மாற்று இதயம் பொறுத்துவது என்பது தமக்கு நல்ல சவாலாக இருந்ததாக சக டாக்டர்கள் கூறினர்.

இம்மருத்துவ வெற்றியால் இனி கிடைக்கபோகும் நன்மைகள்?

இத்தொழில் நுட்பம் வெற்றி பெற்றுள்ளமையினால், இவனை போன்ற இதய கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பலகோடி சிறுவர்களின் வாழ்வுக்கு புத்துயிர் கொடுக்க ஒரு சாதகமான சூழல் அமைந்த சந்தோசத்தில் தனது இதயம் மிக வேகமாக துடிப்பதாக இன்னுமொரு முறை சிரித்தார் டாக்டர் அண்டோனியோ.

உண்மையில் இது தான் முதற்தடவையா?

ஏற்கனவே கனடா, கெண்டகி, நியூகாஸ்ட்டில் ஆகிய மருத்துவ மனைகளில் முற்றிலும் செயற்கையான மாற்று இதயம் பொருத்தப்பட்டுள்ள போதும், குறிப்பிட்ட காலத்திற்கு, அல்லது குறித்த நேரத்திற்கு இயங்க கூடியதாகவே அவை வடிவமைக்கப்பட்டிருந்தன.

இவற்றிலிருந்து இந்த இத்தாலிய செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சை தனித்து வெற்றி பெற்றிருப்பதற்கு காரணம், இது நிரந்தரமானது என்பது மட்டுமல்ல. அச்சிறுவன் 20,25 ஆண்டுகளுக்கு மற்றவர்களை போல மிக சாதாரணமாக எவ்வித பயமும் இல்லாமல் வாழலாம்

அக்டோபர் 2, இந்தியவை பெருமைப்படுத்த காந்தி பிறந்தார். இத்தாலியை பெருமைப்படுத்த நினைத்த அந்நாட்டு வைத்தியர்களின் முயற்சிக்காக இச்சிறுவன் மீண்டும் பிறந்திருக்கின்றான்.

மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறீர்கள்?

பொதுவாக இத்தாலியர்கள் வீண்பெருமைக்காரர்கள் என்றொரு உலகளாவிய கருத்துண்டு.

மூன்றரை மணி நேர மகிழ்ச்சிக்காக, 150-170 கோடி செலவில் ஒரு திரைப்படம் - அதன் கதாநாயகன் தனது சம்பளத்தை கூட இன்னமும் வாங்கவில்லையென்பதை தற்போதைய தமிழ்நாட்டு பெருமையாக கூறுவோமானால், ஒரு தாயின் கண்ணீர்க்கதறலுக்காக 22 கோடி ரூபாய் மதிப்புடைய ஒரு மாற்று செயற்கை இதயத்தை அச்சிறுவனுக்கு உடனடியாக பொருத்த முன்வந்த டாக்டர் அண்டோனியோவை இத்தாலியர்கள் பெருமையாக கூறுவதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை
.

நன்றி 4தமிழ்மீடியா